இராசாவைப் பற்றி

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு                            குறள்994

ஈடுபாட்டுடன் நன்மை செய்த பிறர்க்குப்
பயன்பட்ட வாழ்க்கையுடையாரது பண்பினை உலகம் கொண்டாடும்.

இரா.சாரங்கபாணி (இராசா) சிதம்பரம் அண்மையில் உள்ள தேவன்குடியில் (21/03/1925)  பிறந்து, குமுடிமூலையில் வளர்ந்தார்.

புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் எட்டாம் வகுப்பு  வரையிலும் படித்து 1942 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று புலவர் (1947), பி.ஓ.எல் (1949), சென்னைப் பல்கலை கழகத்தில் எம்.ஏ, (1955) எம்.லிட், (1962) பி.எச்.டி (1969) பட்டம் பெற்றார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1949 இல் தமிழ்த் துறை ஆசிரியராய்ச் சேர்ந்து அங்கேயே 32 ஆண்டுகள் பணி புரிந்து படிப் படியாக விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், உயர் ஆராய்ச்சி மைய நெறியாளர் என உயர்ச்சி பெற்றார்.

இராசா காரைக்குடித் தமிழ்ச்சங்கத்தில் துணைத்தலைவராக இருந்து, சங்க இலக்கிய வகுப்புகள் நடத்திய பெருமைக்கு உரியவர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின் முதல் சிறப்பு நிலைப் பேராசிரியராகவும், பின் துறைத் தலைவராகவும் 1982 ஆம் ஆண்டு துவங்கி 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டு துவங்கி 6 ஆண்டுகள் சிறப்பு நிலைப் பேராசிரியராய் திருக்குறள் ஆய்வகத்தில் பணியாற்றினார்.

சிதம்பரம் தில்லைத் தமிழ்மன்றத்தில் கிழமைதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தி மூன்றாண்டுகளில் திருக்குறள் பாடத்தையும், புறநானூற்று வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தியமை இவரின் தமிழ் இலக்கிய ஈடுபாட்டின் வெளிப்பாடாகும்.

எழுதிய புத்தகங்கள் பல (20 +). அவற்றுள் சில

திருக்குறள் உரை வேற்றுமை (மூன்று பாகம்), வள்ளுவர் வகுத்த காமம், திருக்குறள் உரையாசிரியர்கள், திருக்குறள் இயல்புரை முதலியன.

பரிபாடல் திறன் (1975), மாணிக்கச் செம்மல் (1999) ஆகிய நூல்கள் தமிழக அரசின் விருதினைப் பெற்றன.

தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், கேரளப் பல்ககலைக் கழகத்திலும் இவர் எழுதிய இயற்கை விருந்து, குறள் விருந்து, பரிபாடல் திறன், சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் நூல்கள் பாடநூல்களாக இடம் பெற்றன.

விருதுகள்:

1981 ஆம் ஆண்டு குன்றக்குடி ஆதீனத்தினர் “பெரும் புலவர்” பட்டம் கொடுத்தனர்.
1998 ஆம் ஆண்டு தமிழக அரசின் “திருவள்ளுவர்” விருது பெற்றார்.
2000 ஆம் ஆண்டு “பேரவைத்தமிழ்ச் செம்மல்” விருதினை மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் அளித்தது.

இரா.சாரங்கபாணி அவர்கள் 23/08/2010 காலை பதினொரு மணிக்குச் சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள குறள் இல்லத்தில் இயற்கை எய்தியதால்  இராசாவின் தமிழ்த் தொண்டு  நிறைவுற்றது.